வணக்கம் !

ஆவடி சட்ட மன்றத் தொகுதியின் உறுப்பினராகி ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்து இந்த தொகுதியை எனக்கு தந்தார்கள். நான் வெற்றி பெற வாக்களித்த, ஒத்துழைப்பு தந்த, பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் மீது மாறாத அன்பும்,பாசமும் ஆவடித் தொகுதி மக்கள் கொண்டுள்ளனர். நானும் நம் தொகுதியினை “ முன்மாதிரி  “ ( model) தொகுதியாக உருவாக்க பாடுபடுகிறேன். இதனை மனதில் வைத்தே எனது தேர்தல் வாக்குறுதிகளும், அறிக்கைகளும் குறுகிய, நீண்ட காலத் திட்டங்களைக் கொண்டிருந்தன. இது வரையில் அரசு சார்ந்த திட்டங்கள், வசதிகள் இயன்றவரை தொகுதிக்குக் கொண்டு வந்துள்ளேன். அது போல சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இது தவிர எங்களது மாஃபா அறக்கட்டளையும் கடந்த ஒரு வருடமாக கல்வி, விளையாட்டுத்துறை, உடல் நல பராமரிப்பு,மகளிர் மேம்பாடு, இளைஞர் வேலைத் திறன் மேம்பாடு, சுற்றுப்புற சூழல் பராமரிப்பு போன்ற தளங்களில் பலத் திட்டங்களையும், சேவைகளையும் செய்து வருகிறது. எங்களின் இந்த முயற்சிகளில் உதவி வரும் அனைத்து நண்பர்களுக்கும்,நிறுவனங்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் “ நல்லதொரு குடும்பம் “ என்ற திட்டத்தின் மூலம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்து அவர்கள் வாழ்வு மேம்பட செய்து வருகிறோம்.

தனி ஒரு ஆளாய் நானே எல்லாவற்றையும் செய்ய இயலாது. எனவே நல் உள்ளம் கொண்ட தனி நபரோ, நிறுவனங்களோ, சேவை நிறுவனங்களோ பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் இந்த சீரிய பணியில் பங்கு பெற்று ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன். உங்களின் தனி நபர் பங்களிப்பு, மேலான கருத்துக்கள் மற்றும் நன்கொடைகள் ஆகியவற்றை நாங்கள் மிகவும் மதிப்பு மிக்கதாக கருதுகிறோம். உங்களின் ஒவ்வொரு ரூபாயும் வெளிப்படையான அதே நேரம் நல்ல முறையிலும் பயன் படுத்தப்படும்.
வாருங்கள், நல்ல ஒரு சமூதாயத்தை உருவாக்க சேர்ந்து உழைப்போம் !

என்றும் அன்புடன்,

க.பாண்டியராஜன்
சட்ட மன்ற உறுப்பினர்,
ஆவடி